உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 1.20 லட்சம் ஏக்கர் நெற்பயிரை நாசமாக்கும் பூச்சிகள் ... விவசாயிகள் திணறல்: மருந்து தெளித்தும் கட்டுப்படாததால் போராட்டம்

1.20 லட்சம் ஏக்கர் நெற்பயிரை நாசமாக்கும் பூச்சிகள் ... விவசாயிகள் திணறல்: மருந்து தெளித்தும் கட்டுப்படாததால் போராட்டம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை விட்டு பனிப்பொழிவு துவங்கிய நிலையில், சம்பா பருவத்திற்கு பயிரிடப்பட்டுள்ள 1.20 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களில், பருவநிலை மாற்றம் காரணமாக இலைப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால், மருந்தினங்களை தெளித்தும் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருவதுடன், பாதிப்புகளை தவிர்க்க தினமும் அவற்றுடன் மல்லுக்கட்டி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, 1.20 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்பதால், மற்ற பருவங்களை காட்டிலும், சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவர். குறிப்பாக, பொன்னேரி தாலுகாவில் பெரும்பாலான கிராமங்கள் வங்காள விரிகுடா கடலின் கழிமுக பகுதிகளை ஒட்டியே அமைந்துள்ளதால், மழைநீரை கொண்டு நெல் பயிரிடுகின்றனர். மாவட்டத்திலேயே அதிபட்சமாக, பொன்னேரி தாலுகாவில், 45,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. நடப்பாண்டும் விவசாயிகள் நடவுப்பணி முடித்து, களை பணிகளை மேற்கொள்ளும்போது, வடகிழக்கு பருவமழை துவங்கியது. சீரான இடைவெளியில் மழைப் பொழிவு இருந்ததால், நெற்பயிர்கள் பாதிப்பின்றி வளர்ந்தன. 'டிட்வா' புயல் காரண மாக, கடந்த 1 - 4ம் தேதி வரை அதிகளவில் மழைப்பொழிவு இருந்தது. நான்கு நாட்களில் 42 செ.மீ., மழை பெய்தது. கனமழையின் காரணமாக, பொன்னேரி தாலுகாவிற்கு உட்பட்ட சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்கள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 5,400 ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகின. இதனால், விவ சாயிகள் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், மழைக்கு தப்பிய நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது. இலை சுருட்டு புழு நெற்பயிர்களின் இலைகளின் பச்சையத்தை சுரண்டி, வெண்மையாக மாற்றி வருகிறது. குருத்துப்பூச்சியும் அதிகரித்து, நெற்பயிர்களின் வளர்ச்சியை பாதித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகள் பல்வேறு மருந்தினங்களை தெளித்து வருகின்றனர். இருந்தும் அவற்றை கட்டுப் படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். எப்படியாவது பல்வேறு மருந்துகளை தெளித்து, நெற்பயிர்களை பாதுகாக்க வேண்டும் என, தினமும் அவற்றுடன் போராடி வருகின்றனர். இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: ஏற்கனவே தொடர் மழையால், நெற்பயிர்களின் வளர்ச்சி பாதித்துள்ளது. தற்போது, பூச்சி தாக்குதலும் துவங்கிவிட்டது. பல்வேறு மருந்துகளை தொடர்ந்து தெளித்தும், அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு ஏக்கருக்கு, 5,000 ரூபாய் வரை செலவிட்டு, நெற்பயிர்களை பாதுகாக்க போராடி வருகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை விவசாயம் செய்யும் நிலையில், மழை பாதிப்பு, பூச்சி தாக்குதலால் மகசூல் குறைந்துள்ளது. இவற்றில் இருந்து தப்பி, மகசூல் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயே கொண்டு ஓராண்டிற்கு குடும்ப செலவுகளை பார்க்க வேண்டும். எனவே, பாதிக்கப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மழையால் பாதித்த

நெற்பயிர் கணக்கெடுப்பு

சோழவரம் வேளாண் வட்டாரத்தில், 1,500 ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் தொடர்மழையால் பாதிப்பிற்கு உள்ளாகின. இதுகுறித்து, வேளண் மற்றும் வருவாய் துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜு, அப்பணிகளை நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். பயிர் சேத கணக்கெடுப்பு செயலி மூலம், பாதிப்புகளை பதிவேற்றப்படுவதை கண்காணித்தார். பின், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி, அரசிடம் உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பனியால் பாதிப்பு

திருவள்ளூர் வேளாண் துறை அதிகாரி கூறியதாவது: மழைவிட்டு, பனிப்பொழிவு துவங்கியுள்ளதால், பருவநிலை மாறியிருக்கிறது. இதனால், நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான மருந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடக்கிறது. ஓரிரு நாட்களில் அப்பணிகள் முடிந்ததும், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை