உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புறநகர் மின்சார ரயில்களில் 12 பெட்டிகள் இணைக்க வலியுறுத்தல்

புறநகர் மின்சார ரயில்களில் 12 பெட்டிகள் இணைக்க வலியுறுத்தல்

திருவள்ளூர்: சென்னை சென்ட்ரலில் இருந்து, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் அனைத்திலும், 12 பெட்டிகள் இணைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் ரயில் பயணியர் சங்கத்தினர், சென்னை கோட்ட ரயில்வே பொது மேலாளருக்கு அளித்துள்ள மனு:சென்னை சென்ட்ரலில் இருந்து, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், 450க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில், தினமும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர்.இந்த வழித்தடங்களில் முன், 8 பெட்டிகளைக் கொண்ட, 'மெமு' மற்றும், 9 பெட்டிகளைக் கொண்ட, மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வந்தன.கடந்த 2018 முதல், 12 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, 2 ஆண்டுகளுக்குள் அனைத்து ரயில்களும், 12 பெட்டிகள் கொண்டவையாக மாற்றப்படும் என, ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் உள்ள, அனைத்து ரயில் நிலையங்களிலும், 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நின்று செல்லும் வகையில் நடைமேடை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.இருப்பினும், 'பீக் அவர்' எனப்படும், அலுவலக நேரங்களில் 8 மற்றும் 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் தான் அடிக்கடி இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணியர் கடும் அவதிப்படுகின்றனர்.எனவே, ரயில்வே துறையினர், அனைத்து புறநகர் மின்சார ரயில்களிலும், 12 பெட்டிகள் இணைத்து இயக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ