பள்ளி கட்டடப் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளி, 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டடம், 2019ல் பழுதடைந்தது. மாணவர்கள் அதே பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதியில் தற்காலிகமாக பயின்று வருகின்றனர்.இதையடுத்து பழைய கட்டடம் இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்ட, 2023ம் ஆண்டு டிசம்பரில் டெண்டர் விடப்பட்டது. அதன்படி 1.80 கோடி ரூபாயில் கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ஜனவரியில் பணி துவங்கியது. தற்போது, 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் நேற்று ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். அப்போது கட்டடத்திற்கு பயன்படுத்தப்பட்ட சிமென்ட் கலவைகள், கம்பிகள் முறையாக பயன்படுத்தப்பட்டு உள்ளதா மற்றும் அறைகளின் அளவீடுகள் குறித்து கேட்டு ஆய்வு செய்தார்.அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:தமிழகம் முழுதும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து வருகிறேன்.பெரியகளக்காட்டூர் பள்ளி கட்டடப் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளேன். மழையால் கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்கிறோம். இதுவரை எந்த பாதிப்பும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.