தனிநபர் கழிப்பறை திட்டத்தில் முறைகேடு
திருவள்ளூர்:தனிநபர் கழிப்பறை திட்டத்தில், பயனாளிகளுக்கு முறையாக மானியம் கிடைக்கவில்லை என, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் ஊராட்சியைச் சேர்ந்த அமுதவாணன் என்பவர் திருவள்ளூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தண்ணீர்குளம் ஊராட்சியில், 2015-19ல், 309 பயனாளிகளுக்கு துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், தனி நபர் கழிப்பறை கட்ட, தலா 12,000 ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருவள்ளூர் ஒன்றிய பொதுத் தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.ஆனால், மேற்கண்ட பயனாளிகளில், இதுவரை 50 பேர் கூட கழிப்பறை கட்டவில்லை. பெரும்பாலானோருக்கு 12,000 ரூபாய் மானியம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாமல், மோசடி நடந்துள்ளது. மேற்கண்ட பணம் முறைப்படி பயனாளிகளை சென்றடைந்ததா என விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.