திருத்தணி அரசு மருத்துவமனையில் சி.டி.,ஸ்கேன் முழு நேரம் இயங்குமா?
திருத்தணி: திருத்தணியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் மையம் முழு நேரம் செயல்பட வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர். திருத்தணியில் உள்ள அரசு பொது மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, கடந்த பிப்ரவரி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சி.டி.,ஸ்கேன் மையம், காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. அதற்கு பின், சி.டி.,ஸ்கேன் எடுப்பதற்கு தனியார் மருத்துவமனைகள் அல்லது திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைக்கின்றனர். இதனால், நோயாளிகள் கடும் சிரமப்படுகின்றனர். மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்திய நிலையில், இரவு 10:00 மணி வரையாவது சி.டி.,ஸ்கேன் மையம் செயல்பட வேண்டும் என, நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.