பராமரிப்பு இல்லாத சுடுகாடு கலைஞர் நகர் மக்கள் அவதி
திருத்தணி:கலைஞர் நகர் பகுதியில் உள்ள சுடுகாடு, பராமரிப்பின்றி உள்ளதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருத்தணியில் உள்ள புதிய சென்னை சாலையில், நந்தியாற்றின் உயர்மட்ட பாலம் அருகே கலைஞர் நகர் சுடுகாடு உள்ளது. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட சுடுகாட்டில், நகராட்சி நிர்வாகம், 2015- 2016ம் ஆண்டு, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் தகன மேடை, மின்விளக்கு மற்றும் ஆழ்துளை கிணறு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியது. ஆனால், முறையாக சுடுகாட்டை பராமரிக்காததால், சுடுகாட்டிற்கு செல்லும் பாதை படுமோசமான நிலையில் உள்ளது. மேலும், ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்ட கைபம்பு சேதமடைந்துள்ளதால், இறுதி சடங்கின் போது, தண்ணீர் வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். இதுதவிர, சுடுகாட்டில் ஆழ்துணை கிணறு அருகே மெகா பள்ளமும் ஏற்பட்டுள்ளது. மின்விளக்கு ஒரு மாதத்திற்கு மேல் பழுதாகி உள்ளது. எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, கலைஞர் நகர் சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.