கலியனுார் - விடையூர் மேம்பாலம் தயார் 20 கிராமவாசிகளின் 30 ஆண்டு கனவுக்கு விமோசனம்
திருவள்ளூர்:திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது கலியனுார் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு அருகில், நெமிலி அகரம், குப்பம் கண்டிகை, மணவூர், ராஜபத்மாபுரம் உட்பட, 20 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமவாசிகள், கல்வி, மருத்துவம், அத்தியாவசிய பணிகளுக்காக, விடையூர் வழியாக திருவள்ளூர் செல்ல வேண்டும். இந்த கிராமங்களுக்கும், விடையூருக்கும் குறுக்கே, கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. கலியனுார், நெமிலி அகரம் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்தோர், அத்தியாவசிய பணிக்காக, தற்காலிக பாதை அமைத்து கொசஸ்தலை ஆற்றைக் கடந்து விடையூர் வந்து சென்றனர்.மழை காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்ட கிராமவாசிகள், கொசஸ்தலை ஆற்றை கடக்க முடியாமல், திருவாலங்காடு, நாராயணபுரம் வழியாக, 25 கி.மீட்டர் துாரம் பயணித்து திருவள்ளூர் சென்று வந்தனர். கடந்த 30 ஆண்டுகளாக இந்த அவலம் நீடித்தது. கடந்த, 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கில், கலியனுார் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்தவர்கள், விடையூர் வழியாக திருவள்ளூர் வர முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, கிராமவாசிகளின் வசதிக்காக, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக, 3.60 கோடி ரூபாய் செலவில், கடந்த, 2017-18ல் 144 மீட்டர் நீளம், 8.6 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்பட்டது. ஆனால், மேம்பாலம், இரண்டு கரையையும் இணைக்காமல் கிடப்பில் போடப்பட்டது. விடையூர் பகுதியில், 50 அடி வரையும், கலியனுார் பகுதியில் 120 அடி வரையும் மேம்பாலத்துடன், கரைகள் இணைக்கப்படவில்லை. இதனால், பாலம் கட்டுமான பணி நிறைவடைந்தும், ஏழு ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் பாலம் இருந்தது. கடந்த, 2023, நவம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் சென்றதால், பொதுமக்கள், வழக்கம் போல், திருவாலங்காடு, நாராயணபுரம் வழியாக சென்று திருவள்ளூர் வந்தனர்.ஆனால், மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர், விடையூர் வர 20 கி.மீட்டர் துாரம் செல்ல வேண்டும்; இதனால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, தண்ணீரில் நடந்து சென்று, பின் ஏணியை பயன்படுத்தி பாதியில் நிறுத்தப்பட்ட மேம்பாலத்தில் ஏறி, பள்ளிக்குச் சென்றனர்.இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக, அந்த ஆண்டு தற்காலிக சாலை அமைத்தனர். இந்த நிலையில், 'மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் மாணவ, மாணவியர் கடும் சிரமப்பட நேரிடும். எனவே, பாதியில் நிற்கும் விடையூர்-கலியனுார் மேம்பாலத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்' என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர்.இதையடுத்து, ஒருங்கிணைந்த ஊரக ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் திட்டத்தில், தமிழக அரசு, 3.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. பல்வேறு சிக்கல்களை கடந்து, கலியனுார் - விடையூர் மேம்பாலம் பணி கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வரும் முதல்வர் ஸ்டாலின், இந்த பாலத்தை திறக்க உள்ளார். இதன் வாயிலாக, 30 ஆண்டுக்கும் மேலாக கலியனுார் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகளின் கோரிக்கை நிறைவடைந்துள்ளது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் வந்தாலும், எளிதாக கடக்கும் வகையில் மேம்பால பணி நிறைவடைந்துள்ளதால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.'தினமலர்' நாளிதழுக்குகலியனுார்வாசிகள் நன்றிதிருவள்ளூர் மாவட்டத்தில், 2015ம் ஆண்டு பெய்த பலத்த மழையால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், கலியனுார் - விடையூர் கிராமங்கள் 20 நாட்களுக்கும் மேலாக துண்டிக்கப்பட்டன. இதுகுறித்து நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானதை தொடர்ந்து, 'நபார்டு' திட்டத்தில், 3.60 கோடி ரூபாயை ஊரக வளர்ச்சி முகமை ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியில் பாலம் கட்டப்பட்டாலும், இரண்டு கிராமங்களை இணைக்க நிதி வசதியின்றி கைவிடப்பட்டது.மீண்டும், இப்பிரச்னை குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியிட்டதன் அடிப்படையில், கூடுதலாக 3.40 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து, பால பணி நிறைவடைந்துள்ளது. பாலம் துவங்கி, அதனை நிறைவேற்றும் வரை தொடர்ந்து செய்தி வெளியிட்ட, நமது நாளிதழுக்கு கலியனுார் கிராமவாசிகள் சார்பில், பாண்டூர் ஒன்றிய கவுன்சிலர் சுலோக்சனா மோகன்ராவ் நன்றி தெரிவித்துள்ளார்.