துார்வாரிய கழிவுநீர் கால்வாய் கழிவை அகற்றாததால் கனகம்மாசத்திரத்தினர் அவதி
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் ஊராட்சியில், பஜார் சாலை, பிராமணர் தெரு, காமராஜர் தெரு, காவலர் குடியிருப்பு என, 10க்கும் மேற்பட்ட தெருக்களில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.இங்கு மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கும் மழைநீர் செல்ல கழிவுநீர் கால்வாயுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தங்கு தடையின்றி மழைநீர் மற்றும் கழிவுநீர் சென்ற நிலையில், சில ஆண்டுகளாக, கால்வாய்கள் பராமரிப்பு இல்லாததால் தூர்ந்து போயின.இதனால் கடந்தாண்டு டிசம்பரில் பெய்த மழைநீருடன் கழிவுநீர் குடியிருப்புகளில் தேங்கியது இதனால் பகுதிவாசிகள் அவதியடைந்தனர்.எனவே கால்வாய்களை தூர்வார வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த வாரம் கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது. பஜார் தெருவில் கால்வாய் தூர்வாரி எடுக்கப்பட்ட கழிவு, கால்வாய் அருகே குவியல் குவியலாக கொட்டப்பட்டு உள்ளது. ஒரு வாரமாக கழிவு அகற்றப்பட்டாததால் அவர்கள் அவதியடைந்துள்ளனர்.தற்போது அரசு மேல்நிலைப் பள்ளி முதல், காவல் நிலையம் வரை 100 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் தூர்வாரப்பட்ட கழிவு, குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது.இதனால், பள்ளி, மருத்துவமனை, பஜாருக்கு காய்கறி வாங்க செல்வோர் துர்நாற்றத்தால் நோய் தொற்று ஏற்படுமோ என, புலம்பி செல்கின்றனர்.எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.