சாலை வசதி ஏற்படுத்த குமரன்நகர் மக்கள் மனு
திருத்தணி,திருத்தணி நகராட்சி ஐந்தாவது வார்டு குமரன் நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்ல புதிய சென்னை சாலையில் இருந்து சாலை அமைப்பதற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கழிப்பறை கட்டடத்தை அகற்ற வேண்டும் என, குமரன் நகரைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலை திருத்தணி தாசில்தாரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:முருகப்பநகர் மற்றும் குமரன் நகர் பகுதிக்கு, சென்னை மாநில நெடுஞ்சாலையில் இருந்து செல்வதற்கு சாலை வசதி வேண்டும். தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும், திருத்தணி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரனிடம் மனு அளித்தோம்.இதையடுத்து, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால், சாலை அமைக்கும் பாதையில் சர்ச் கழிப்பறை இடையூறாக உள்ளது.இந்த இடத்தை நில அளவை செய்து, சாலை அமைக்க இடையூறாக உள்ள கழிப்பறையை மட்டும் அகற்றி, சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை பெற்ற தாசில்தார் மலர்விழி, 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.