உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கூட்டுறவு வார விழாவில் 2,124 பேருக்கு கடனுதவி

 கூட்டுறவு வார விழாவில் 2,124 பேருக்கு கடனுதவி

திருவள்ளூர்: திருவள்ளூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில், 2,124 பேருக்கு, 23.81 கோடி ரூபாய் கடனுதவி வழ ங்கப்பட்டது. திருவள்ளூரில் , கூட்டுறவு துறை சார்பில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, கலெக்டர் பிரதாப் முன்னிலையில் நடந்தது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் தலைமை வகித்து, 2,124 பேருக்கு பல்வேறு வகையான கடனுதவியாக, 23.81 கோடி ரூபாய் வழங்கினார். அதன்பின், அமைச்சர் நாசர் பேசியதாவது: நாட்டிலேயே முதல் முறையாக, திருவள்ளூர் மாவட்டம் திருவூரில், 1904ம் ஆண்டில் விவசாய சேவை கூட்டுறவு சங்கம் துவக்கப்பட்டது. தொடர்ந்து, 1911ம் ஆண்டு, திருவள்ளூரில் நகர கூட்டுறவு வங்கி துவக்கப்பட்டது. தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை உட்பட, 227 கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக, மக்களுக்கு தேவையான கடன் சேவை வழங்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், 40 கிராமிற்கு உட்பட்ட பொது நகை கடன் பெற்ற, 20,430 பேருக்கு, 100 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பின், பேச்சு, கட்டுரை போட்டி, கதை சொல்லுதல், ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியரை பாராட்டி, அமைச்சர் பரிசு வழங்கினார். சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு நிறுவனம் மற்றும் சங்கங்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன் - திருவள்ளூர், சந்திரன் - திருத்தணி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை