முன்னாள் ஜனாதிபதிக்கு சிலை வைக்க இடம் தேர்வு
திருத்தணி:முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு, திருத்தணியில் மணிமண்டபம் மற்றும் திருவுருவச்சிலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த திருத்தணியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.முதல்வர் ஸ்டாலின், நடப்பாண்டிலேயே மணிமண்டபம் மற்றும் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என உறுதி அளித்தார். இதற்காக, திருத்தணி பொதுப்பணித் துறையினர், 50 லட்சம் ரூபாய் திட்டமதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.நேற்று காலை, அமைச்சர் நாசர், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் ராஜாராமன், கலெக்டர் பிரதாப் திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள், திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் நடுநிலைப்பள்ளி, பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் மற்றும் அதன் அருகே உள்ள பொல்லரி முனுசாமிநாயுடு பூங்கா ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர்.பின், அமைச்சர் நாசர் கூறியதாவது:திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் கட்டுவதற்கு, ஐந்து இடங்களை தேர்வு செய்துள்ளோம். செப்., 5ம் தேதிற்குள் திருவுருவச் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.