எல்.ஆர்.மேடு சாலை பழுது தடுமாறி விழும் டூ - வீலர்கள்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பஜாரில் இருந்து நாயுடுகுப்பம் நோக்கி செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ள பிற மாவட்ட சாலையாகும்.அந்த சாலையில், எல்.ஆர்.மேடு கிராமம் அருகே சாலை பழுதாகி, நீளவாக்கில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.குறிப்பாக, டூ- - வீலர்கள் தடுமாறி கீழே விழ நேரிடுகிறது. இரவு நேரத்தில் அச்சத்துடன் அப்பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து வருகின்றனர்.ஆரம்பாக்கம் - நாயுடுகுப்பம் சாலை சீராக உள்ள நிலையில், எல்.ஆர்.மேடு கிராமத்தில் மட்டும் பழுதான அந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.