நகரி அண்ணாமலையார் கோவிலில் வரும் 10ல் மஹா கும்பாபிஷேகம்
நகரி:ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், நகரி நகராட்சியில், அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் பல லட்சம் ரூபாயில் நடத்தப்பட்டு, வரும் 10ம் தேதி கோவிலின் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.இதற்கான கோவில் நிர்வாகம் கும்பாபிஷேகத்திற்காக, ஐந்து யாகசாலைகள் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. நாளை, காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் மற்றும் கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது.நாளை மறுதினம், விநாயகர் பூஜை சாந்தி ஹோமம் மற்றும் கும்ப அலங்காரத்துடன் முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. மேலும், 9ம் தேதி காலையில் இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில், மூன்றாம் கால யாகபூஜையும் நடக்கிறது.வரும் 10ம் தேதி, காலை 9:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமும், தொடர்ந்து விநாயகர், வள்ளி தெய்வானை முருகப்பெருமான், பைரவர், நவகிரகம், உண்ணாமுலையம்மன், அண்ணாமலையார், நடராசர் சிவகாமி ஆகிய சன்னதிகளில் மூலவர்களுக்கு கலசநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.பின், மூலவர்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும், மாலையில் உற்சவர்கள் வீதியுலாவும் நடைபெறும்.