ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் உயிரிழப்பு
ஊத்துக்கோட்டை: அக். 26-: ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர், சடலமாக மீட்கப்பட்டார். திருத்தணி அடுத்த நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 35; பெயின்டர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு பிரவலீஷ், 12, என்ற மகன், லோகேஸ்வரி, 8, என்ற மகளும் உள்ளனர். சத்யா தனது குழந்தைகளுடன், ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். அவரை பார்க்க சென்ற சுரேஷ், நேற்று முன்தினம் மாலை மீன்பிடிக்க, ஊத்துக்கோட்டை ஏரிக்கு சென்றார். இரவு வரை சுரேஷ் வீடு திரும்பாததால், ஊத்துக்கோட்டை காவல் நிலையம் மற்றும் தேர்வாய் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் நேற்று சுரேஷை சடலமாக மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஊத்துக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.