இளம்பெண் குளிப்பதை போனில் படம் பிடித்தவருக்கு 3 ஆண்டு சிறை
மணலி: இளம்பெண் குளிப்பதை மொபைல் போனில் படம் பிடித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மணலியைச் சேர்ந்த 23 வயது பெண், கடந்த 2021 ஏப்., 28ம் தேதி வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் மோனிஷ் கவுதம், 27, என்பவர், குளியலறை கதவின் ஓட்டை வழியாக மொபைல்போன் மூலம் பெண் குளிப்பதை படம் பிடித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிடவே, மோனிஷ் கவுதம் ஓட்டம் பிடித்து, அவரது வீட்டிற்குள் பதுங்கி உள்ளார். இது குறித்து அப்பெண் தட்டிக்கேட்ட போது, மோனிஷ் கவுதம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை அடுத்து, மணலி போலீசார் வழக்கு பதிந்து, மோனிஷ் கவுதமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மோனிஷ் கவுதமுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.