மாம்பழ கூழ் தொழிற்சாலை திருவள்ளூர் விவசாயிகள் எதிர்பார்ப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், நெல், கரும்புக்கு அடுத்தபடியாக, மா சாகுபடி செய்யப்படுகிறது. செந்துாரா, அல்போன்சா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.கடம்பத்துார், பூண்டி, திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி, திருத்தணி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில், பெங்களூரா ரக மா அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மா பூ பூத்து, ஏப்ரல் இறுதியில் துவங்கி ஆகஸ்ட் வரையில் காய்கள் காய்த்து அறுவடை நடக்கும். ஆண்டுதோறும் மா உற்பத்தி அதிகம் இருப்பதால், அறுவடை செய்த பின், பழமாக விற்பனை செய்யும் போது, விவசாயிகளுக்கு அதிகம் லாபம் கிடைப்பதில்லை.அறுவடை செய்த மாம்பழம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து விடுகின்றனர். லாபம் கிடைக்காவிட்டாலும், செலவுக்கு ஈடு செய்யும் வகையில், விற்பனை செய்யப்படுவதாக மா விவசாயிகள் புலம்புகின்றனர்.சில்லரை விலையில் விற்கப்படுவதால், பழங்கள் அழுகி பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, திருவள்ளூர் பகுதியில், மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.