மாந்தோப்பு காவலாளி கத்தியால் வெட்டி கொலை
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, மாந்தோப்பில் காவலாளியாக பணியாற்றி வந்த நபர், கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலுார்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது அதிலிவாக்கம் கிராமம். இங்கு, 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை. இந்த கிராமத்தில் வசித்து வரும் நாகேஸ்வரராவ் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில், மணி, 55, என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். ஆந்திர மாநிலம், காளஹஸ்தியை சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை, நாகேஸ்வரராவ் வழக்கம் போல் தனது மாந்தோப்பை பார்வையிட சென்றார். அப்போது, தலையில் வெட்டுக் காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் மணி சடலமாக கிடந்தார். இதுகுறித்து, அவர் பென்னலுார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மணியின் உடலை, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.