ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலை விரிவாக்கத்திற்கு அளவீடு
ஊத்துக்கோட்டை,:ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே, 28 கி.மீ., துாரம் உள்ளது. இச்சாலையில் போந்தவாக்கம், பெரிஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி, ஒதப்பை, பூண்டி, புல்லரம்பாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.திருவள்ளூரில் கலெக்டர், எஸ்.பி., வேளாண்மை அலுவலகம், வேலைவாய்பபு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய தலைமை அலுவலகங்கள் உள்ளன. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், மேற்கண்ட அலுவலகங்களுக்கு திருவள்ளூர் செல்கின்றனர்.அதேபோல், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்போர், ஆந்திர மாநிலம், சத்தியவேடு, தடா, சூளூர்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, ஊத்துக்கோட்டை சென்று அங்கிருந்து பயணம் செய்கின்றனர்.போக்குவரத்து மிகுந்த இச்சாலையில், தினமும் 15,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரி இடையே, 2.6 கி.மீ., சாலை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.தற்போது, பெரிஞ்சேரி - திருவள்ளூர் நான்கு வழிச்சாலையாக மாற்ற அளவீடு எடுக்கும் பணி நடந்து வருகிறது.இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறுகையில், 'பொன்னேரியில் நடந்த நலத்திட்ட விழாவில், ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பணிகள் துவங்கியுள்ளது' என்றார்.