திருத்தணி முருகன் கோவிலில் 5 பேரை கடித்த குரங்குகள் ஒரே மாதத்தில் 30 பேர் பாதிப்பு
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஒரே நாளில் ஐந்து பேரை குரங்குகள் கடித்ததால், பக்தர்கள் பீதியடைந்து உள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தற்போது, இக்கோவிலில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. நேற்று முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த மேனகா, 45, என்பவர் தீபம் ஏற்றும் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, குரங்குகள் திடீரென பாய்ந்து கையில் கடித்தன. அதேபோல், மலைக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சதீஷ்குமார், 28, குமார் 33, உட்பட ஐந்து பேரை அடுத்தடுத்து குரங்குகள் கடித்தன. இதில் காயமடைந்த ஐந்து பேரும், திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட பக்தர்களை குரங்குகள் கடித்துள்ளன. எனவே, முருகன் கோவிலில் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.