முதுகு தண்டுவடம் உடைக்கும் அண்ணனுார் பிரதான சாலை வாகன ஓட்டிகள் புலம்பல்
ஆவடி,:ஆவடி அடுத்த அண்ணனுார் 60 அடி சாலை, ஒன்றரை கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையையொட்டி, சிவசக்தி நகர், ஜே.பி., நகர் உட்பட 13க்கும் மேற்பட்ட தெருக்களில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.அய்யப்பாக்கம், திருவேற்காடு, அம்பத்துார், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை, பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக, அடிக்கடி இச்சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், கடும் முதுகு வலியால் அவதியடைந்து வருகின்றனர்.குறிப்பாக இரவு வேளைகளில் பள்ளத்தில் தடுமாறி விழுந்து அவதிப்படுகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.