குளமான பேருந்து நிலைய நுழை வாயில் தடுமாறும் வாகன ஓட்டிகள்
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, சென்னை கோயம்பேடு, செங்குன்றம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், புத்துார், நெல்லுார், காளஹஸ்தி, சத்தியவேடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பணிமனையில் இருந்து கிளம்பும் பேருந்துகள், பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் சென்று பயணியரை ஏற்றிச் செல்கின்றன. மாநகர பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளும், சென்று வரும் பேருந்து நிலைய முன் பகுதி சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.மழைக் காலங்களில் இந்த பள்ளங்களில் மழைநீர் சேர்ந்து சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அவ்வழியே வாகனங்கள் வரும் போது, அங்கு செல்லும் பாதசாரிகள், மாணவர்கள் மீது சேறு நிறைந்த தண்ணீர் தெறிப்பதால் உடைக்கள் பாழாகின்றன.தற்போது பெய்த மழையால் பேருந்து நிலைய நுழை வாயில் குளம்போல் காட்சியளிக்கிறது.எனவே, பேரூராட்சி நிர்வாகம் இனியும் மெத்தனமாக இல்லாமல் பேருந்து நிலைய நுழை வாயிலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.