உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெற்களமாக மாறிய நெடுஞ்சாலை அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பயணம்

நெற்களமாக மாறிய நெடுஞ்சாலை அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பயணம்

திருத்தணி, நெமிலியில் நெற்களம் இல்லாததால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் உலர்த்தி வருகின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அச்சத்துடன் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். திருத்தணி தாலுகாவில், 65 ஊராட்சிகள் உள்ளன. இதில், பெரும்பாலான ஊராட்சிகளில் விவசாய பணி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, நெல், வேர்க்கடலை, சிறுதானியங்கள், கரும்பு மற்றும் காய்கறி வகைகள் அதிகளவில் விவசாயிகள் பயிரிடுகின்றனர். நெல், சிறுதானியங்கள், வேர்க்கடலை உள்ளிட்டவற்றை விவசாயிகள் அறுவடை செய்த பின், அவற்றை உலர்த்துவதற்காக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் நெற்களம் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சில ஊராட்சிகளில் இதுவரை நெற்களம் அமைத்து தராததால், தானியங்களை சாலைகளில் உலர்த்தி வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியம் நெமிலி கிராமத்தில் நெற்களம் இல்லை. நெமிலி ஊராட்சியில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, ஈரப்பதம் குறைவதற்காக, திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் உலர்த்தி வருகின்றனர். இச்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், விவசாயிகளின் நலன் கருதி அனைத்து கிராமங்களிலும் நெற்களம் ஏற்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை