சாலை பணியை விரைந்து முடிக்க நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
திருவள்ளூர், திருவள்ளூரில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை, மழைக்காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என, கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.திருவள்ளூர் நகர்மன்ற கூட்டம், தலைவர் உதயமலர் தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் ரவிச்சந்திரன், கமிஷனர் தாமோதரன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:நகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட மேட்டு தெருவில், குடிநீர் லாரி வந்ததால் உடைந்த தரை பாலத்தை சீரமைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., நகர் சித்தி விநாயகர் கோவில் தெருவில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.சோழன் தெருவில் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி, ஒரு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பகுதிவாசிகள் சிரமப்படுகின்றனர். அதை மழை காலத்திற்குள் சீரமைக்க வேண்டும்.புங்கத்துார் - ஜெயா நகர் சாலை சந்திப்பில், ஆக்கிரமிப்புக்குள்ளான கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். நகராட்சி முழுதும், தெருக்களில் பெயர் பலகை அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.நகர்மன்ற தலைவர் உதயமலர் பேசியதாவது:சேதமடைந்த பகுதிகளில் துவங்கிய சாலை பணிகள் அனைத்தும், மழைக்காலத்திற்குள் நிறைவேற்றித் தரப்படும். முதல்வர் உத்தரவின்படி, காலனி என்ற பெயர் உள்ள தெருக்களில், அவற்றின் பெயரை மாற்றி, புதிய பெயரை பகுதிவாசிகளிடம் ஆலோசித்து, நகராட்சி கமிஷனரிடம் தெரிவிக்கலாம்.மேலும், புதிதாக உருவாகும் நகர்களுக்கும், பெயர்களை தயார் செய்து, கமிஷனரிடம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், குடிநீர் குழாய் பதித்தல், புதிய மின் விளக்கு அமைத்தல் உள்ளிட்ட, 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.