சாலையில் குப்பை கொட்டினால் அபராதம் நகராட்சி சார்பில் கோலமிட்டு விழிப்புணர்வு
திருவள்ளூர்:சாலையில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் சார்பில் கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், 450க்கும் மேற்பட்ட தெருக்களில், 60,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து, நாள்தோறும் வெளியேற்றப்படும் குப்பையை, நகராட்சி சார்பில், தனியார் துப்புரவு ஊழியர்கள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சியில் உள்ள சிலர், தங்கள் வீடுகளுக்கு வரும் துப்புரவு ஊழியர்களிடம் குப்பையை அளிக்காமல், அருகில் உள்ள காலியிடங்களில் வீசி செல்கின்றனர். இதனால், நகராட்சியில் உள்ள தெருக்களில் குப்பை சேகரமாகி, அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சிலர், குப்பையை சாலையோரம் கொட்டி தீ வைத்து எரிப்பதன் வாயிலாக எழும் புகையால், சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து, நகராட்சி சுகாதார பிரிவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், மக்கள் கண்டுகொள்வதில்லை. இதையடுத்து, நகராட்சி கமிஷனர் தாமோதரன் உத்தரவின்படி, சுகாதார அலுவலர் மோகன் தலைமையிலான சுகாதார அலுவலர்கள், பொதுமக்கள் குப்பை கொட்டி வரும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நேற்று நகராட்சி 2வது வார்டுக்கு உட்பட்ட ஜவஹர் நகர் பகுதியில், பகுதி மக்கள் குப்பை கொட்டி வரும் காலியிடங்களை சுத்தப்படுத்தினர். பின், அங்கு கோலமிட்டு, 'காலியிடத்தில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்' என்ற விழிப்புணர்வு வாசகத்தை எழுதி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, நகராட்சி பகுதியில், குப்பை கொட்டும் அனைத்து காலி இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என, நகராட்சி சுகாதார துறையினர் தெரிவித்தனர்.