நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது. கும்மிடிப்பூண்டி, பிரித்வி நகரில், நவசக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 1ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கோவில் எதிரே அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில், நான்கு கால பூஜைகள் நடந்தன. பின், விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நவசக்தி விநாயகர், துர்க்கை அம்மன் மற்றும் நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நவசக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றன. கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.