உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுபாலம் அமைப்பதில் அலட்சியம் வீடுகளில் புகும் மழைநீரால் அவதி

சிறுபாலம் அமைப்பதில் அலட்சியம் வீடுகளில் புகும் மழைநீரால் அவதி

திருத்தணி: திருத்தணி நகராட்சி நிர்வாகம் மெத்தனத்தால், மழைநீர் வெளியேற சிறுபாலம் அமைக்கப்படவில்லை. இதனால், வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்படுகின்றனர். திருத்தணி நகராட்சி, ஐந்தாவது வார்டு கச்சேரி தெரு மற்றும் சுப்ராயமேஸ்திரி தெருவில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கச்சேரி தெருவில் முறையாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படவில்லை. மேலும், கச்சேரி தெருவில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்கும், பழைய பஜார் தெரு மற்றும் ராதாகிருஷ்ணன் தெருவில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்வதற்கும் சிறுபாலம் அமைக்க வேண்டும். ஆனால், கச்சேரி தெரு பகுதியில் சிறுபாலம் அமைக்கப்படாததால், மழை பெய்யும் போது மழைநீர் குளம் தேங்குகிறது. மேலும், பலத்த மழை பெய்தால், மழைநீர் செல்ல வழியின்றி, வீடுகளில் தண்ணீர் அடிக்கடி புகுந்துவிடுகிறது. இதனால், கச்சேரி தெரு மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். மழைநீர் வெளியேற முறையாக கால்வாய் வசதி மற்றும் சிறுபாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, கச்சேரி தெருவில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றி, சிறுபாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ