பூங்கா பராமரிப்பில் அலட்சியம் கழிவுநீர் குளமாக மாறிய அவலம்
திருமழிசை, திருமழிசையில் பராமரிப்பில்லாத சிறுவர் பூங்கா, கழிவுநீர் குளமாக மாறியுள்ளது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. திருமழிசையில் இருந்து காவல்சேரி செல்லும் நெடுஞ்சாலையோரம், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை முறையாக பராமரிக்காததால், தற்போது மழைநீருடன், குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர், பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், பூங்காவின் முன்புறம் சிறு கடைகள் அமைத்து, கழிவுபொருட்கள் பூங்காவுக்குள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பூங்காவிற்கு அருகே வசிப்போருக்கு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பூங்காவை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சிறுவர் பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.