உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை வாரச்சந்தையால் கடும் அவதி

ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை வாரச்சந்தையால் கடும் அவதி

திருவாலங்காடு, திருவாலங்காடில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் வாரச்சந்தை கடை அமைப்பதாலும், வாகனம் நிறுத்துவதாலும், ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவாலங்காடில் - அரக்கோணம் ---- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காய்கறி சந்தை அமைக்கப்படுகிறது. இந்த சந்தைக்கு திருவாலங்காடு, தக்கோலம், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், விவசாயிகள் கடை அமைத்து, காய்கறி உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனை செய்கின்றனர். இங்கு, 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும் நிலையில், காய்கறி வாகனங்கள், காய்கறி வாங்க வருவோர் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால், திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு, காய்கறி வாங்க செல்கின்றனர். அவ்வாறு நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. மேலும், ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயிலில் கடைகள் அமைக்கப்படுவதால், நோயாளிகளை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம், 20 - 30 நிமிடம் வரை நகர முடியாமல் நிற்கின்றன. சில நேரங்களில் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆரம்ப சுகாதார நிலையம் முன் காய்கறி கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ