15 ஆண்டாக தண்ணி காட்டிய வடமாநில குற்றவாளி சிக்கினார்
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலைக் குற்றவாளியை மேற்கு வங்க மாநிலத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லம்பேடு பகுதியில், மேற்கு வங்க மாநிலம் ஹசன்பாத் பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் அலி, 36, என்பவர் குடும்பத்துடன் தங்கி, கடந்த 2009ம் ஆண்டு பணிபுரிந்து வந்தார். கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில், மனைவி ஷகிமா, 30 மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், அஷ்ரப் அலியை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு அஷ்ரப் அலி ஜாமினில் வெளியே வந்தார். பின், நீதிமன்றத்தில் ஆஜராகாமல், 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.இதுகுறித்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் உத்தரவின்படி, டி.எஸ்.பி., தமிழரசி தலைமையிலான தனிப்படை போலீசார், மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கியிருந்த அஷ்ரப் அலியை, நேற்று கைது செய்து, திருவள்ளூர் அழைத்து வந்தனர். பின், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.