திருத்தணி புதிய பைபாஸ் சாலை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு நோட்டீஸ்
திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலைக்கு வாகனங்கள் செல்ல, புதிய பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது.இந்த புதிய பைபாஸ் அருகே உள்ள பாறை புறம்போக்கு நிலத்தில், கடந்த 2020ம் ஆண்டு, திருத்தணி நகராட்சி மற்றும் கார்த்திகேயபுரம் ஊராட்சியைச் சேர்ந்த 108 பேருக்கு, திருத்தணி வருவாய் துறையினர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளனர்.பின், பட்டா தாரர்கள் அப்பகுதியில் தற்காலிக குடியிருப்புகள் கட்டினர். மேலும், பாறை புறம்போக்கு வகைப்பாட்டை மாற்றி, 108 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது தெரிய வந்தது.கடந்த 2022ம் ஆண்டு திருவள்ளூர் கலெக்டர், அந்த 108 பட்டாக்களை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், சட்டசபை கூட்டத்தொடரில், 'பட்டாக்கள் ரத்து செய்யப்பட்ட இடத்தில், அரசு சார்பில் தமிழ்நாடு குடிசை வாரியத்தின் மூலம் அடுக்குமாடு குடியிருப்புகள் கட்டி வீடுகள் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, கலெக்டரின் உத்தரவை எதிர்த்து, ஜெயவேல் என்பவர் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின், உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், குடியிருப்புகளுக்கு முன் வணிகத்திற்காக கடைகள் கட்டி வியாபாரம் செய்து வந்ததாக, கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து, திருத்தணி வருவாய் துறையினர், கலெக்டர் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.மேலும், பாறை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள இடத்தில், எந்தவித ஆக்கிரமிப்புகளும் ஏற்படுத்தக் கூடாது. மீறினால் தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905ன் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, வருவாய் துறை சார்பில், வீடுகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.'விரைவில் நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றி பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.