குடிநீர் பிரச்னைக்கு தீர்வு அகூரில் அதிகாரிகள் உறுதி
திருத்தணி: நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, அகூரில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு ஓரிரு நாளில் தீர்வு காணப்படும் என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சியில் ஒன்பது ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின்மோட்டார்கள் அமைத்து குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பி, தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இந்நிலையில், மூன்று மின்மோட்டார்கள் பழுது மற்றும் குடிநீர் பைப் சேதம் அடைந்ததால் ஒரு மாதமாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யவில்லை. இதனால் அகூர் பகுதி மக்கள் குடிநீர் பிரச்னையால் தவித்து வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து திருத்தணி ஒன்றிய அலுவலக பொறியாளர் தர்மேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தி, பணி மேற்பார்வையாளர் வைசாலி ஆகியோர் ஊராட்சிக்கு நேரில் சென்று மக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், பழுதாகி உள்ள மின்மோட்டார்கள், பைப் லைன் குறித்து ஆய்வு செய்து, ஓரிரு நாளில் புதிய மின்மோட்டார்கள், பைப் லைன் அமைத்து குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வோம் என, உறுதி அளித்தனர்.