சின்னகளக்காட்டூரில் குடிநீர் பிரச்னை புகார் வரவில்லை என அதிகாரி அலட்சியம்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னகளக்காட்டூர் கிராமம். இங்கு, 10க்கும் மேற்பட்ட தெருக்களில், 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பள்ளக்காலனி, மேட்டுத்தெரு மற்றும் கிராமம் என, மூன்று பகுதிகளுக்கும் தனித்தனியே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.தற்போது, மேட்டுத் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீரேற்றும் மோட்டார் பழுது காரணமாக, இரண்டு நாட்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.கோடைக்காலம் என்பதால், குடிநீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தட்டுப்பாடு காரணமாக மக்கள் அருகே உள்ள தெருக்களில் தண்ணீர் பிடிக்க குடங்களை சுமந்து சென்று வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடால் கடும் அவதியடைவதாக அவர்கள் புலம்புகின்றனர்.இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊரக வளர்ச்சி துறை அதிகாரியின் அலட்சிய பதிலால், அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து திருவாலங்காடு பி.டி.ஓ., பிரபாவதி கூறுகையில், 'இதுவரை எவ்வித புகார்களும் வரவில்லை' என்றார்.