உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியிருப்புகள் இல்லாத இடத்தில் சிமென்ட் கல் சாலை அமைப்பு அரசு நிதியை வீணாக்கும் அதிகாரிகள்

குடியிருப்புகள் இல்லாத இடத்தில் சிமென்ட் கல் சாலை அமைப்பு அரசு நிதியை வீணாக்கும் அதிகாரிகள்

ஊத்துக்கோட்டை, மக்கள் வசிக்கும் இடத்தில் சாலை, கால்வாய் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தாத பேரூராட்சி நிர்வாகம், மக்கள் வசிக்காத இடத்திற்கு, 10 லட்சம் ரூபாயில் சிமென்ட் கல் சாலை அமைத்துள்ளதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள சென்னை செல்லும் சாலையில், எம்.ஜி.ஆர்., நகர் முதல் தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, அடிப்படை தேவையான சாலை, கால்வாய் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாலை, கால்வாய் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், எம்.ஜி.ஆர்., நகர் அருகே உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தையொட்டி, குடியிருப்புகள் இல்லை. இந்த அலுவலகமும் பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளது. ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தின் பொது நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் வசிக்கும் இடத்திற்கு வசதிகள் செய்து கொடுக்காத ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம், குடியிருப்புகள் இல்லாத இடத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் கல் சாலை அமைத்ததை பார்த்து, அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே, கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை