பேரம்பாக்கத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதில்... அலட்சியம் 4 முறை ஐகோர்ட் உத்தரவிட்டும் மதிக்காத அதிகாரிகள்
பேரம்பாக்கம் : பேரம்பாக்கத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, நான்கு முறை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அவற்றை அகற்றுவதில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. தற்போது புதிதாக ஆக்கிரமிப்புகள் பெருகி வருவதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, சர்வே எண் 274ல், 1.75 ஏக்கர் மற்றும் சர்வே எண் 308ல், 17.91 ஏக்கர் என, மொத்தம் 19.66 ஏக்கரில் வண்டிப்பாதை, கசம் எனும் நீர்நிலை பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றில், 40க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம், சர்ச், ரேஷன் கடை உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் கடை நடத்தி வரும் தனிநபர், பட்டா கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 2021, ஏப்ரலில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், நீர்நிலை புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக நிறுவனங்களை அகற்ற வேண்டும் என, கடந்த 2021, அக்டோபரில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றாமல் அலட்சியம் காட்டி வந்தது. இந்நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, கடந்த 2022, ஜனவரி 19ம் தேதி, மீண்டும் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அப்போதைய திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, வருவாய், ஊரக வளர்ச்சி, நீர்வள ஆதாரத்துறையினர், கடந்த 2022, பிப்ரவரி 23ம் தேதி, திருவள்ளூர் டி.எஸ்.பி., சந்திரதாசன் தலைமையில், மப்பேடு போலீசாருடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஒரு நாள் மட்டும் பெயரளவுக்கு நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, பின் கிடப்பில் போடப்பட்டது. அதனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியில், தி.மு.க., கட்சியினரே மீண்டும் ஆக்கிரமித்து, 'ஆவின்' போன்ற கடைகளை அமைத்துள்ளனர். பின், 2023ல் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. ஆனால், இம்முறையும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, கடந்த 2024, நவம்பரில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. இதையடுத்து, 2024, நவம்பர் 22ம் தேதி, கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில், வருவாய், ஊரக வளர்ச்சி, நீர்வள ஆதாரத்துறையினர், திருவள்ளூர் டி.எஸ்.பி., தமிழரசி தலைமையில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க கட்டடம் உள்ளிட்ட, 20 கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர். ஆனால், பேருந்து நிலையம் எதிரே, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. இதற்கு, அதிகாரிகள் அலட்சியமே காரணம் என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றம் நான்கு முறை உத்தரவிட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது பெயரளவிற்கு ஆக்கிரமிப்பை அகற்றுவது வேடிக்கையாக உள்ளது என, அப்பகுதிவாசிகள் அதிருப்தி தெரிவித்தனர். எனவே, பேரம்பாக்கத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை, கோர்ட் உத்தரவுப்படி அகற்றத் தேவையான நடவடிக்கைகளை கலெக்டர் எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பேரம்பாக்கத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற, கடந்த 25ம் தேதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு படிவம் - 6 வழங்கியுள்ளோம். தற்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்து வருவதால், ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். - ஆதீஸ்வரன், துணை வட்டாட்சியர், வெங்கத்துார் மண்டலம். எச்சரிக்கை நோட்டீஸ் 'சும்மா' நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை நோட்டீசில், '1905ம் ஆண்டு, 3வது ஆக்ட், 3வது பிரிவின் படி, தீர்வை செலுத்தப்படும் நிலத்தை அனுமதியின்றி அனுபவித்து வருகிறீர். இந்த நோட்டீஸ் சேர்ப்பிக்கும் தேதி முதல், மேற்படி நிலத்தை காலி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், மேற்படி நிலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களோ அல்லது பயிர்களோ பறிமுதல் செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கடிதத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான கால வரையறை குறிப்பிடப்படவில்லை. பெயரளவிற்கு வழங்கப்பட்டுள்ள அந்த நோட்டீஸ், பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.