திருத்தணி கோட்டத்தில் 79 ஏரிகளில் 1 மட்டுமே நிரம்பியது
திருத்தணி:வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழைத்த தாழ்வு மண்டலத்தால், கடந்த, 14ம் தேதி இரவு முதல், நேற்று முன்தினம் இரவு வரை திருத்தணி வருவாய் கோட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் மழை பெய்தது. இதனால், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. வருவாய் கோட்டத்தில் உள்ள, மொத்தம், 79 ஏரிகளை நீர்வளத்துறையினர் பராமரித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்கள் பெய்த மழையால், 79 ஏரிகளில், லட்சுமாபுரம் ஏரி மட்டுமே தண்ணீர் நிரம்பி, உபரி நீர் கடைவாசல் வழியாக வெளியே செல்கிறது. மீதமுள்ள ஏரிகளில் குறைந்த அளவில் தண்ணீர் வரத்து இருந்தது. இதற்கு காரணம் ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் கால்வாய்கள் சீரமைக்காததால் மழைநீர் ஏரிக்கு செல்வதற்கு வழியின்றி வீணாது. எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்தால், வடகிழக்கு பருவ மழையின் போது வரும் தண்ணீரை ஏரியில் சேமிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.