கும்மிடி சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் திறப்பு
கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலக வளாகத்தில், பெண் தொழிலாளர்களின் வசதிக்காக குழந்தைகள் காப்பகம் திறக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில், ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். திருமணமான பெண் தொழிலாளர்கள், வேலைக்கு செல்லும் போது குழந்தைகளை பராமரிப்பதில் உள்ள சிரமம் கருதி, சிப்காட் வளாக திட்ட அலுவலகத்தில், குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்தப்பட்டது. நேற்று அந்த காப்பகத்தை, காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். குழந்தைகள் காப்பகத்தில் நடந்த திறப்பு விழாவில், சிப்காட் திட்ட அலுவலர் சரவணன் நிதின், உற்பத்தியாளர்கள் சங்க செயலர் சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒன்று முதல் ஆறு வயதுடைய குழந்தைகள் இலவசமாக பராமரிக்கப்படுவர் என, சிப்காட் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.