பொன்னேரியில் சாலை மீடியனுக்கு வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்
பொன்னேரி:தச்சூர் - பொன்னேரி மற்றும் பொன்னேரி - மீஞ்சூர் ஆகிய மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்ப்பதற்காக, மீடியன்கள் அமைக்கப்பட்டு அவற்றின் இருபுறமும் கறுப்பு - வெள்ளை வர்ணம் பூசி வைக்கப்பட்டிருந்தன.மீடியன்களை தனிநபர்கள் தங்களது வியாபார விளம்பரங்கள் எழுதுவதும், கண்ணீர் அஞ்சலி, பிறந்தநாள் வாழ்த்து, அரசியல் கட்சியினரின் ஆர்ப்பாட்டம், போராட்டம் என, பல்வேறு சுவரொட்டிகள் ஒட்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.மேலும், தொடர் வாகன போக்குவரத்தால், மீடியன்களில் துாசிபடிந்து கறுப்பு - வெள்ளை வர்ணம் மங்கியது. இதனால், சாலையில் மீடியன்கள் இருப்பது தெரியாத நிலையில், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது.வாகன ஓட்டிகளின் தொடர் கோரிக்கையின் பயனாக, பொன்னேரி நெடுஞ்சாலைத்துறையினர் தற்போது, மீடியன்களில் கறுப்பு - வெள்ளை வர்ணம் பூசும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:நெடுஞ்சாலை மீடியன்களில் கறுப்பு - வெள்ளை வர்ணம் இருப்பது பனி மற்றும் மழைக்காலங்களிலும், இரவு நேரங்களிலும் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சாலையை தெளிவாக தெரிந்து கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கிறது.வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வர்ணம் பூசிய பின், சுவரொட்டிகளை ஒட்டினால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.