குடிநீர் தொட்டியில் குரங்குகள் குளியல் பீதியில் உறையும் பனப்பாக்கம் மக்கள்
திருவாலங்காடு, பனப்பாக்கம் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குரங்குகள் குளியல் போடுவதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். திருவாலங்காடு ஒன்றியம் பனப்பாக்கம் கிராமத்தில், கனகம்மாசத்திரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து, கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், ஊராட்சி ஊழியர்கள், நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்தனர். இந்நிலையில், நீர்த்தேக்க தொட்டியின் மீது, ஐந்துக்கும் மேற்பட்ட குரங்குகள், ஒரு வாரமாக அங்கேயே முகாமிட்டுள்ளன. இந்த குரங்குகள், குடிநீர் தொட்டிக்குள் இறங்கி குளிப்பதாகவும், இயற்கை உபாதை கழிப்பதாகவும், அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்கள், தற்போது தொற்று நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். எனவே, குடிநீர் தொட்டியை வசிப்பிடமாக பயன்படுத்தி வரும் குரங்குகளை பிடித்து, வனத்துக்குள் விட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.