உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி சுவர் ஓவியத்தில் உதயசூரியன் அதிர்ச்சியில் பெற்றோர்கள்

பள்ளி சுவர் ஓவியத்தில் உதயசூரியன் அதிர்ச்சியில் பெற்றோர்கள்

ஆரணி:சோழவரம் ஒன்றியம், ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு, 64 மாணவர்கள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.அந்த பள்ளிக்கு, சோழவரம் ஒன்றிய நிர்வாகம் சார்பில், அரசு பள்ளிகளில் ஒட்டுமொத்த அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் துாய்மை புனரமைப்பு திட்டத்தின் கீழ், 2.40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதை பள்ளியில் உள்ள சிறு பழுதுகள் சரி பார்த்து, வெள்ளையடித்து, பள்ளி வகுப்பறை சுவர்களின் உட்புறமும், வெளிபுறமும் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டன.வனம், கடல் போன்ற இயற்கை காட்சிகளுடன் சிங்கம், மயில் போன்ற உயிரினங்களும் அழகாக தீட்டப்பட்டன. ஆனால் சூரியனை வரைந்த விதம் மட்டும் பெற்றோர்களையும் கிராம மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் சின்னமான உதயசூரியன் போன்று பள்ளி சுவற்றில் சூரியன் வரையப்பட்டுள்ளது. தேர்தலின் போது, இந்த பள்ளி ஓட்டுச்சாவடியாக மாறும் நிலையில், தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு, மேற்கண்ட உதயசூரியன் படம் அழிக்க வாய்ப்புள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி, மக்கள் வரி பணத்தில் இருந்து ஒதுக்கப்படும் நிதியை தேவையின்றி விரயம் செய்யப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !