ஜி.என்.டி., சாலையில் கட்சி மேடை! மாற்று இடம் தேர்வு செய்யப்படுமா?
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகரை பொறுத்தவரை அரசியல் கட்சி மேடை, பேருந்து நிலையம் எதிரே, ஜி.என்.டி., சாலையோரம் அமைக்கப்படுவது வழக்கம். இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் சந்திக்கும் இன்னல்களை, அரசு துறை அதிகாரிகள் கண்டுகொள்வது கிடையாது.ஜி.என்.டி., சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்படும் கட்சி மேடை மற்றும் பார்வையாளர் இருக்கைகளால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.மேலும், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் செல்ல முடியாதபடி, அனைத்து வழிகளும் அடைக்கபட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு முறை தேர்தல் நெருங்கும் போதும், கும்மிடிப்பூண்டி பகுதிவாசிகள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் வர இருப்பதால், இப்போது இருந்தே அரசியல் கட்சியினர், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் மேடை அமைத்து கூட்டம் நடத்தி வருகின்றனர்.இனி வரும் காலங்களில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் அதிகரிக்கும் என்பதால், சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்படும் மேடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும்.கும்மிடிப்பூண்டியில் அரசியல் கட்சி கூட்டம் நடத்த போக்குவரத்துக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்ய வேண்டும். கும்மிடிப்பூண்டி போலீசார் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.