பழவேற்காடு:சுற்றுலா பயணியர் விட்டு செல்லும் பிளாஸ்டிக், குடியிருப்புகளின் கழிவுகள். பழவேற்காடு கடற்கரை பகுதியில் கொட்டி குவிக்கப்படுவதுடன், அதே இடத்தில் பள்ளம் தோண்டி புதைப் பதால், கடற்கரை பொலிவிழந்து பாழாகி வருவதுடன், 'ஆலிவ் ரிட்லி' கடல் ஆமை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியானது, வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு, 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்து உள்ளன. இங்குள்ள கடற்கரை அழகை ரசிக்கவும், கடலில் இறங்கி குளித்து விளையாடவும், வார மற்றும் விடுமுறை நாட்களில், சுற்றுலா பயணியர் வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணியர் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள், கடற்கரை முழுதும் பரவி கிடக்கின்றன. மேலும், குடியிருப்புகளின் குப்பை கழிவுகளும், இங்கு கொட்டி குவிக்கப்படுவதால் கடற்கரை அழகு பொலிவிழந்து வருகிறது. ஆமைகளுக்கு ஆபத்து தற்போது, முகத்துவாரம் வரை வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக பாதை வசதி இருப்பதால், வெளியிடங்களில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் எடுத்து வந்து, கடற்கரை பகுதிகளில் கொட்டப்படுகின்றன. கடலின் அதிகப்படியான அலைகளின்போது, கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் கடல் நீருடன் அடித்து செல்லப்படுகின்றன. குப்பை கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதித்து, கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பழவேற்காடு கடற்கரை பகுதியில், ஆண்டுதோறும் டிசம்பர் - ஏப்ரல் மாதம் வரை, 'ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமைகள், முட்டையிட்டு செல்வது வழக்கம். வனத்துறையினர் முட்டைகளை சேகரித்து, பொரிப்பகங்களில் வைத்து பாதுகாத்து, குஞ்சு பொரித்த பின் கடலில் விடுகின்றனர்.
Galleryஇந்த ஆண்டு, 14,704 முட்டைகளை சேகரித்து, அதிலிருந்து, 13,217 ஆமை குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டனர். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில், 50க்கும் மேற்பட்ட 'ஆலிவ் ரிட்லி' ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசால், இவைகள் இறந்து கரை ஒதுங்கியது தெரிந்தது. இதுபோன்ற உயிரினங்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டக்கூடாது என, அறிவுறுத்தப்படுகிறது. அதிருப்தி ஆனால், பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. பின் அவை, அதே இடத்தில் பள்ளம் தோண்டி புதைக்கப்படுகிறது. 'இது சரியான நடவடிக்கை இல்லை' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கினறனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பழவேற்காடு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியர் விட்டு செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள், கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு, கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. கடலில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏராளமான உயிரினங்கள் இறப்பது நமக்கு தெரிவதில்லை. கடந்த மே மாதம், மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக கடற்கரையில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 'கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. 'அதன் வாயிலாக கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியான கடற்கரையாக இப்பகுதியை மாற்ற வேண்டும்' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், தொடர்ந்து இங்கு எந்தவொரு கண்காணிப்பும் இல்லை. கடற்கரை பகுதிகளில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், சுற்றுலா பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.