பொன்னேரி ரயில் நிலையத்தில் டிக்ெகட் பெற பயணியர் தவிப்பு
பொன்னேரி: பொன்னேரி ரயில் நிலையத்தில், நான்கு கவுன்டர்களில், இரண்டு மூடியே இருப்பதால் பயணச்சீட்டு வாங்குவதற்கு பயணியர் நீண்டநேரம் காத்திருந்து, தவிப்புக்குளாகின்றனர். பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் சென்று வருகின்றனர். இவர்கள் பயணச்சீட்டு பெறுவதற்கு வசதியாக, முதல் நடைமேடையில், நான்கு கவுன்டர்கள் உள்ளன. இதில் ஒன்று, நீண்டதுார பயணத்திற்கான முன்பதிவு மையமாக செயல்படுகிறது. மற்ற மூன்றில், மாதந்திர மற்றும் தினசரி பயணச்சீட்டு வழங்க வேண்டும். இந்த மூன்றில் ஒன்று மட்டுமே தொடர்ந்து செயல்படுகிறது. மற்ற இரண்டும் செயல்பாடு இன்றி முடங்கி கிடக்கிறது. தற்போது ஒரே ஒரு கவுன்டரில் மட்டும் மாதாந்திர மற்றும் தினசரி பயணத்திற்கான பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இதனால், பயணியர் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணச்சீட்டு பெறும் நிலை உள்ளது. பயணச்சீட்டு பெறுவதில் ஏற்படும் காலதாமத்தால், குறித்த நேரத்தில் புறநகர் ரயில்களை பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பயணியர் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இது குறித்து அங்குள்ள ரயில் நிலைய அலுவலர்களை கேட்கும்போது, உரிய பதில் அளிக்காமல், வடமாநில மொழிகளில் பேசி, பயணியரை அலட்சிய படுத்துகின்றனர். பொன்னேரி ரயில் நிலையத்தில் அனைத்து பயணச்சீட்டு கவுன்டர்களும் செயல்படுவதற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.