நிலையத்திற்குள் வராத பேருந்துகள்: கால்கடுக்க காத்திருக்கும் பயணியர்
ஊத்துக்கோட்டை: அரசு பேருந்துகள் நிலையத்திற்குள் வராமல் சாலையிலேயே பயணியரை ஏற்றி, இறக்கி செல்வதால், மழை, வெயிலில் கால்கடுக்க பயணியர் காத்திருக்கின்றனர். ஊத்துக்கோட்டையில், விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து பணிமனை உள்ளது. இங்கிருந்து கோயம்பேடு, செங்குன்றம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ஆந்திராவின் பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி, நெல்லுார், சத்தியவேடு ஆகிய பகுதிகளுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பணிமனையில் இருந்து புறப்படும் பேருந்துகள், பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் சென்று, பயணியரை ஏற்றிச் செல்ல வேண்டும். ஆனால், திருப்பதி செல்லும் பேருந்து, அங்குள்ள அண்ணாதுரை சிலை அருகே வரை மட்டுமே செல்கிறது. பின், அங்கிருந்து திருப்பதி செல்கிறது. இதனால், நாகலாபுரம், பிச்சாட்டூர், புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி செல்லும் பயணியர் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும், செங்குன்றம் செல்லும் பேருந்துகள், நிலையத்திற்குள் செல்லாமல் சாலையில் நின்று செல்வதால், பேருந்துகள் எப்போது வந்து செல்கிறது என, தெரியாமல் பயணியர் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால், சாலையோரம் கால்கடுக்க பயணியர் காத்திருக்கின்றனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை பணிமனை மேலாளர் எழில் கூறுகையில், “பணிமனையில் இருந்து புறப்படும் பேருந்துகள் அனைத்தும், இனி பேருந்து நிலையத்திற்குள் சென்று, பயணியரை ஏற்றிச் செல்ல அறிவுறுத்தப்படும்,” என்றார்.