உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குளமாக மாறிய சாலைகள் தொற்று அச்சத்தில் மக்கள்

குளமாக மாறிய சாலைகள் தொற்று அச்சத்தில் மக்கள்

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் ஊராட்சியில் குளமாக மாறிய சாலைகளால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். பெரியபாளையம் ஊராட்சியில் பழைய காவல் நிலைய சாலையில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, அரசு தொடக்கப் பள்ளி, கூட்டுறவு வங்கி, ரேஷன் கடை போன்றவை உள்ளன. மேலும், பாளையக்கார தெரு, கண்ணப்பன் நகர், நேதாஜி நகர், அம்பேத்கர் நகர் மற்றும் வேலப்பாக்கம், பனையஞ்சேரி ஆகிய ஊராட்சிகளுக்கு செல்லும் சாலையாக உள்ளது. தினமும் ஏராளமானோர் செல்லும் இச்சாலை, குண்டும், குழியுமாக மாறியுள்ளது. தொடக்கப் பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர், கற்கள் பெயர்ந்த இச்சாலை வழியே செல்கின்றனர். சமீப நாட்களாக மழை பெய்து வருவதால், இந்த பள்ளங்களில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, கலெக்டர் பிரதாப் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை வசதி செய்து தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ