உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிராம சபையில் பல இடங்களில் மக்கள்...புறக்கணிப்பு: அடிப்படை வசதி இல்லை என குற்றச்சாட்டு

கிராம சபையில் பல இடங்களில் மக்கள்...புறக்கணிப்பு: அடிப்படை வசதி இல்லை என குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பெரும்பாலான இடங்களில் குறைவான மக்களே பங்கேற்றனர். பல ஊராட்சிகளில் அடிப்படை வசதி இல்லை என கூறி, கிராம சபை கூட்டத்தை பொது மக்கள் புறக்கணித்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் மொத்தம், 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நேற்று மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம் குறித்த விவாதித்தில், இணையவழி மனை பிரிவு, கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றிதழ் அடிப்படையில் கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிபடுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.பின், கலெக்டர் பிரதாப் பேசியதாவது:நாட்டின் வளர்ச்சி, கிராமத்தில் இருந்து தான் வருகிறது. மக்களோடு மக்களாக இருந்து கோரிக்கைகள் நிறைவேற்றுவது தான் கிராம சபையின் நோக்கம்.அரசு சார்பில் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. மக்கள் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு, பசுமையான சூழலை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திருவள்ளூர் தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜேந்திரன், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.பூண்டி ஒன்றியம், மேலக்கரமனுார் ஊராட்சியில் ஊராட்சி செயலர் கோதண்டன் தலைமையில் கிராம சபை நடந்தது.ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் இருந்து போந்தவாக்கம் - மேலக்கரமனுார் கிராமம் வரை, சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இச்சாலை, தார் சாலையாக மாற்ற வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் சரியான முறையில் பதில் கூறாததால் கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர்.

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள, 61 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சிலர் கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்து சென்ற பி.டி.ஓ., அமிழ்தமன்னம், சமாதானம் செய்தார். கோரிக்கையை, கிராம சபையில் பதிவு செய்யும்படி தெரிவித்தார். தொடர்ந்து பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதேபோல மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை, பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அந்த ஊராட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பு செய்தனர்.

திருத்தணி

திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் தனி அலுவலர்கள் தலைமையில் நடந்தது. பல ஊராட்சிகளில், பத்துக்கும் குறைவான கிராம மக்கள் பங்கேற்றனர்.மேலும் ஒன்றிய அலுவலர், ஊராட்சி செயலர் மற்றும் கிராம சுகாதார அலுவலர் ஆகியோர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். பிற அரசு துறை அலுவலர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலர் ஆகியோரிடம் மக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை மற்றும் கிராம சபை கூட்டம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.

பள்ளிப்பட்டு

பள்ளிப்பட்டு ஒன்றியம், நெடியம் ஊராட்சி வெங்கம்பேட்டையில் நடந்த கிராம சபையை புறக்கணிப்பதாக பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டங்களில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதால், கிராம சபையை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். மேலும், ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விதமான தனியார் தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தினர். இதனால், கிராமசபை துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அருள், பகுதிவாசிகளை சமரசம் செய்தார். பின் கிராமசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.

திருவாலங்காடு

திருவாலங்காடு ஒன்றியம், 42 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலர்கள், பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். பெரியகளக்காட்டூர் கிராமத்தில் 2023--- 24ம் ஆண்டு ஊராட்சியில் நடந்த பணிகள் மற்றும் அதன் விபரங்களை கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கேட்டனர். அதற்கு ஒன்றிய அதிகாரி மூன்று நாட்களில் நடந்த பணிகள், தொகை மற்றும் ஆவணங்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றார்.

கடம்பத்துார்

கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் நடந்த கிராம சபையில் பொதுநிதி செலவினம் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் உளுந்தை வி.ஏ.ஓ., குமரன், துவக்கப்பள்ளி தலைமயைாசிரியர் தனசேகர், பற்றாளர் ரதி, கிராம சுகாதார செவிலியர் கற்பகம், ஊராட்சி செயலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து எவ்வித விவாதமும் நடைபெறாமல் அரசு உத்தரவுப்படி பெயரளவிற்கு நடந்தது. ஈக்காடு கண்டிகை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாதாகோவில் பகுதியை சேர்ந்த டேனியல் என்பவர் தங்கள் பகுதியை குக்கிராமமாக மாற்ற வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பெற்ற ஊராட்சி செயலர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

ஏர்போர்ட் வேண்டாம் 13வது முறை தீர்மானம்

மே தின சிறப்பு கிராம சபை கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது. ஏகனாபுரம் ஊராட்சி தலைவர் சுமதி தலைமை வகித்தார். கூட்டத்தில், பரந்துார் விமான நிலையத்தால், பறிபோகும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.ஏகனாபுரத்திற்கு தேவையான வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பரந்துார் விமான நிலையம் வேண்டாம் என, 13வது முறையாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி