உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்வாயை உடைத்த நெடுஞ்சாலை துறை பொக்லைனை சிறைபிடித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

கால்வாயை உடைத்த நெடுஞ்சாலை துறை பொக்லைனை சிறைபிடித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் தேங்கியுள்ள கழிவுநீரை, குடியிருப்பு பகுதியில் தேங்கும் வகையில் கால்வாயை உடைத்த நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து, பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீராதாரமான, 48 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமரை ஏரி, நீர்வளத்துறையினர் பராமரிப்பில் உள்ளது. தொழிற்சாலைகள், டேங்கர் லாரிகள் மற்றும் குடியிருப்புகளின் கழிவுநீர் ஏரியில் கலந்து, கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. ஒவ்வொரு மழைக்காலங்களிலும், ஏரியில் இருந்து நிரம்பி வழியும் கழிவுநீர், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் ஆறாக பாயும். அச்சமயங்களில், நகர் முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், ஒரு வாரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். ஜி.என்.டி., சாலையில் கழிவுநீர் சூழ்வதை தடுக்க நினைத்த நெடுஞ்சாலைத் துறையினர், கழிவுநீரை திருப்பி விடும் தவறான முடிவை எடுத்தனர். அதன்படி, பிரித்வி நகர் குடியிருப்பு பகுதியை கழிவுநீர் சூழும் வகையில், கழிவுநீர் செல்லும் கால்வாயை, நேற்று பொக்லைன் இயந்திரம் கொண்டு உடைத்தனர். அதை கண்ட பகுதி மக்கள், பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார், பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். உடைத்த கால்வாயை சீரமைத்து தருவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர். அதன்பின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை