சாலை சீரமைக்காததை கண்டித்து கேசவபுரத்தில் மக்கள் போராட்டம்
மீஞ்சூர்:குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த தெருச்சாலைகளை சீரமைக்காத ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து, குடியிருப்பு மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீஞ்சூர் ஒன்றியம் நாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கேசவபுரம் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தெருச்சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால், குடியிருப்பு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரு நாட்களாக பெய்து வரும் மழையால், தெருச்சாலைகளில் மக்கள் சிரமத்துடன் பயணித்தனர். முதியவர்கள், பள்ளி மாணவர்கள் பள்ளங்களில் விழுந்தனர். இதனால், ஆத்திரமடைந்த குடியிருப்பு மக்கள் நேற்று, பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'சாலையை சீரமைக்க கோரி, ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என, அதிருப்தியுடன் தெரிவித்தனர். இந்த பேராட்டத்தால் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீசார், குடியிருப்பு மக்களிடம் பேச்சு நடத்தினர். 'சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தனர். அதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.