கழிவுநீர் குளமாக மாறிய சாலையால் மக்கள் அவதி
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டையில் சாலை பழுதாகி கழிவுநீர் தேங்கி நிற்பதால், பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலை மற்றும் பழவேற்காடு சாலையை இணைக்கும் முதல் குறுக்கு சாலை, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாக பராமரிப்பில் உள்ளது. தாழ்வாக உள்ள அந்த சாலையில், சுற்றியுள்ள வீடுகளின் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறியது.பல ஆண்டுகளாக அந்த சாலை சீரமைக்கப்படாததால், எப்போதும் கழிவுநீர் குட்டை போன்று காட்சியளிக்கும். இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் சாலையை பயன்படுத்தாமல், அங்குள்ள கடைகளை ஒட்டி நடந்து சென்று வருகின்றனர்.அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் சிரமத்துடன் கடந்து செல்கின்றன. மேலும் அந்த கழிவுநீர் தேக்கத்தில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி முழுதும் சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது.எனவே கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து உடனடியாக அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.