ராஜாநகரம் ஏரிக்கரை சாலையில் செடிகள் வளர்ந்து தடுப்பு மாயம்
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், ராஜாநகரம் ஏரிக்கரை அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரை சாலை வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், பள்ளிப்பட்டு மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு சென்று வருகின்றன. இந்த ஏரிக்கரை பகுதியில் உள்ள சாலை திருப்பங்களில் வாகனங்கள் நிலை தடுமாறி கவழ்ந்து விபத்தில் சிக்குகின்றன. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் வந்த திருமண கோஷ்டி, லாரியுடன் இந்த ஏரியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ, ஏரிக்கரையோம் உள்ள விவசாய கிணற்றில் விழுந்து மூழ்கியது. இந்நிலையில், ஏரிக்கரையை ஒட்டியுள்ள சாலையோரத்தில், நெடுஞ்சாலை துறையினர் உலோக தடுப்புகளை அமைத்தனர். தற்போது, இந்த உலோக தடுப்புகள், புதரில் மறைந்து கிடக்கின்றன.இதனால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் இந்த வழியாக பயணித்து வருகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன் கருதி, உலோக தடுப்புகளை சூழ்ந்துள்ள புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.