வழிப்பறியில் ஈடுபட்ட டுபாக்கூர் போலீஸ் கைது
மீஞ்சூர்:உத்திரபிரதேசம் மாநிலம், முபராக்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரிஜேஷ் யாதவ், 22; லாரி டிரைவர். கடந்த, 20ம் தேதி இரவு, மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் வழியாக லாரியில் மீஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அங்குள்ள வழுதிகைமேடு டோல்கேட் அருகே செல்லும்போது, பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் லாரியை வழிமடக்கினார்.தன்னை போலீஸ் எனக்கூறி, டிரைவர் பிரிஜேஷை, ஆவணங்களை எடுத்துக்கொண்டு லாரியில் இருந்து கீழே இறங்கி வரும்படி கூறியுள்ளார்.கீழே வந்த பிரிஜேஷிடம் இருந்து ஆவணங்களை வாங்கி பார்த்துவிட்டு, அபாராதம் விதிப்பதாக கூறி, 'ஜி-பே' வாயிலாக, 2,000 ரூபாய் , கையில் வைத்திருந்த, 600 ரூபாய், மொபைல் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி உள்ளார்.வந்தது போலீஸ் அல்ல, வழிப்பறி திருடன் தெரிய வந்த பிரிஜேஷ், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், மீஞ்சூர், ஜவகர் நகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி, 38, என்பவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இவர் மீது மீஞ்சூர், கவரப்பேட்டை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.அதையடுத்து போலீசார் நேற்று மூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1, 000 ரூபாய் , மொபைல், பல்சர் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.